பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

 உலகச் சுற்றுச்சூழல் நாள்: 
குப்பையில்லா 
மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்!

 உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில்  ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'இயற்கையோடு மக்களை இணைப்போம்' என்கிற முழக்கத்தை ஐநா அவை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக முன் வைத்துள்ளது. இதே நாளில் இந்தியாவின் நகர்ப்புற திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்கிற பிரச்சாரத்தை இந்திய அரசு தொடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

 மக்கள் குப்பையை வகை பிரித்து அளிப்பதன் மூலமும், நகராட்சிகள் மக்களிடம் குப்பையை தரம் பிரித்து பெற்று அவற்றை மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்க வைப்பதன் மூலமும் - நகரங்களின் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் திட்டத்தை இந்திய அரசு இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் முதல் செயல்படுத்துகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமானோர் நகரங்களில் வாழும் மாநிலம் தமிழ்நாடு. தமிழக மக்களில் சரிபாதி அளவுக்கும் கூடுதலான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்தியாவிலேயே தனிநபர் அளவில் அதிக குப்பையை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய மாநகரங்களில் அதிக குப்பையை உருவாக்கும் மாநகரம் சென்னை. குப்பை மேலாண்மையில் இந்திய பெருநகரங்களில் கடைசி இடத்தில் இருப்பதும் சென்னை தான். எனவே, குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிகம் இருக்கிறது.

குப்பை பிரச்சினைக்கு முறையாக தீர்வு காண வேண்டும் என்பது 8.3.2016 ஆம் நாள் வெளியிடப்பட்ட இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டாயம் ஆகும். இதனை செயலாக்குவதற்கான ஓராண்டு  காலக்கெடு ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. இந்த விதிகள் அனைத்தையும் 1.6.2017 முதல் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே 22.12.2016 ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது.  இதே போன்று பிளாஸ்டிக் குப்பை, மின்னணுக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆபத்தான கழிவுகள் அனைத்துக்கும் தனி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கழிவு மேலாண்மை குறித்த அனைத்து விதிகளையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக நகரங்களின் குப்பை சிக்கலுக்கு உடனடியாக முழுமையான தீர்வுகாண வேண்டும்.

குப்பை ஒரு சுகாதார பேராபத்து ஆகும். மனிதர்களை தாக்கும் 25% நோய்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடுதான் காரணம். குப்பை பாதிப்பால் 22 வகையான நோய்கள் தாக்குகின்றன. தொண்டை மற்றும் மூக்கு தொற்றுநோய்கள், மூச்சுத்திணறல், எரிச்சல், பாக்டீரியா தொற்று, நோய் எதிர்ப்புசக்தி குறைதல், ஒவ்வாமை, ஆஸ்துமா என ஏராளமான நோய்களுக்கு குப்பை காரணமாகிறது. தண்ணீரில் கலக்கும் குப்பையால் காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சல் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. தூக்கி எறியப்படும் டயர், குவளை, தேங்காய் ஓடு உள்ளிட்ட பொருட்களில் தேங்கும் நன்னீரில் இருந்து - டெங்கு, சிக்குன் குனியா நோய் பரப்பும் கொசு உருவாகிறது. கரப்பான் பூச்சி, ஈக்கள் தொல்லை, பலவிதமான பூச்சிகள், பெருச்சாளி போன்ற தொல்லைகளுக்கு குப்பையே காரணம்.

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரை பெருவெள்ளம் தாக்கியதற்கு குப்பை ஒரு முதன்மைக் காரணம் ஆகும். மழை நீர் வடிகால் வழிகளிலும் சாக்கடைகளிலும் குப்பை அடைத்துக் கொண்டதால் வெள்ள பாதிப்பு அதிகமானது. குப்பை நீர்வளத்தை கெடுக்கிறது. ஆறுகள், ஓடைகள், குளங்கள், ஏரிகள் மாசுபட குப்பையே காரணம். இதனால் நன்னீரும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது. கடலை சென்றடையும் குப்பையால் கடல் வளம் அழிகிறது. குப்பையை எரிப்பதால்  வெளிவரும் கரியமில வாயு புவியை வெப்படையச் செய்கிறது. மீத்தேன் வாயு அதைவிட மோசமானதாகும். குப்பையிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு கரியமில வாயுவை விட 86 மடங்கு கூடுதலாக பூமியை சூடக்குகிறது.

 குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் மற்றும் ஃபியூரான், நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஹெக்சா குளோரோ பென்சீன் - என பலவிதமான வாயுக்கள் வெளியாகின்றன. குரோமியம், ஆர்சனிக் அடங்கிய சாம்பலும் உருவாகிறது. அதிகரிக்கும் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை குறைபாடுகளுக்கு குப்பை எரிப்பும் ஒரு முதன்மைக் காரணம் ஆகும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய்கள் என பலக் கேடுகளுக்கு குப்பை எரிப்பு காரணமாகும். இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிப்படைகின்றனர்.

 எனவே, ஜீன் 5, உலக சுற்றுச்சூழல் நாள் முதல் தமிழநாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் குறைந்த பட்சமாக "ஈரக் கழிவு, உலர் கழிவு" என இருவகையாக குப்பையை வகை பிரிக்க வேண்டும். ஈரக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். உலர் கழிவுளை  நீல நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பிரிக்கப்பட்ட குப்பையை நகராட்சியிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளரிடமோ அளிக்க வேண்டும். வீடுகளில் வகை பிரிக்கப்பட்ட குப்பையை வீடுவீடாக சென்று சேகரிக்க நகராட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை என வகையாக பிரித்து தாங்களே குப்பையை மேலாண்மை செய்ய வேண்டும் அல்லது நகராட்சியிடம் அளிக்க வேண்டும்.

 நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தையும் குப்பை மேட்டில் கொட்டுவது சட்டப்படி குற்றம். மட்கும் குப்பையை தனியே பிரித்து மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சிக்கு உகந்தவற்றை தனியே பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். எதற்குமே பயன்படாத குப்பையை மட்டுமே குப்பை மேட்டில் கொட்டி, விதிமுறைப்படி பராமரிக்க வேண்டும். நீர் நிலைகள், வடிகால்கள், பொது இடங்கள், சாலைகள் என எந்த ஒரு இடத்திலும் குப்பையை தூக்கி எறிவதும், புதைப்பதும், எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இத்தகையை விதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டினை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் நாளில் அனைவரும் இதற்காக உறுதி எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
Previous
Next Post »
0 Komentar