அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை 
அறிவிக்கப்படாத பேருந்து கட்டண
 உயர்வை ரத்து செய்ய வேண்டும்!
 
 
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது பெரிய மோசடியாகும். பினாமி அரசின் இம்மோசடி கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 20 ஆயிரத்து 839 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னையில் 3685, மாவட்டங்களில் 6930 என மொத்தம் 10,615 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர 9141 புறநகர் பேருந்துகள், 1083 விரைவுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடந்த 2011&ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், வாக்களித்த மக்களுக்குப் பரிசாக 18.11.2011 அன்று பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக ஜெயலலிதா அறிவித்தாலும், பத்தாண்டுகளுக்கு உயர்த்தப்பட வேண்டிய கட்டணத்தை ஒரே முறையில் உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தினார். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக சென்னையில் மொத்தமுள்ள 3685 பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை சாதாரண பேருந்துகளாக இயக்கப்பட்டு வந்தன. இப்போது அவற்றில் 800&க்கும் அதிகமான பேருந்துகள் மஞ்சள் பலகை பேருந்துகளாக மாற்றப்பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மஞ்சள் பலகை பேருந்துகளாக இயங்கியவை இப்போது விரைவுப் பேருந்துகளாகவும், விரைவுப் பேருந்துகளாக இயங்கியவை இப்போது சொகுசுப் பேருந்துகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வகையான பேருந்துகளுக்கும் சில வகையான வசதிகள் செய்யப்பட வேண்டும்; அதன்பிறகு தான் அவற்றில் அவ்வகைக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பேருந்தின் பெயர்ப்பலகை வண்ணத்தை மட்டும் மாற்றி விட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொடுமை தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியமாகும்.
சென்னையில் குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.9 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.  புறநகர் மாவட்டங்களைப் பொறுத்தவரை நகரப்பகுதிகளில் இயங்கும் நகரப் பேருந்துகளுக்கு மட்டும்  ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையிலும், புறநகரங்களிலும்  நகரப் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3 ஆக இருந்தது. இப்போது ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், புறநகரப் பேருந்துகளின் கட்டணமும் ரூ.2 முதல் ரூ.40 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளைப் பொறுத்தவரை சில வழித்தடங்களில் ரூ.90 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சாதாரண பேருந்துகளை இடைநில்லா பேருந்துகளாகவும், இடைநில்லா பேருந்துகளை சொகுசுப் பேருந்துகளாகவும் மாற்றி இந்தக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோரில் பெரும்பான்மையினர் ஏழைகளும், பரம ஏழைகளும் தான். அவற்றில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3 என்பதால் சாதாரணப் பேருந்துகள் வருவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்து பயணிப்பது வழக்கமாகும். காரணம் வீட்டிலிருந்து புறப்படும்போதே பொதுமக்கள் பேருந்துக்கான கட்டணம் தவிர கூடுதல் காசு எடுத்துச் செல்வதில்லை என்பது தான்.  இத்தகைய நிலையில் உள்ள மக்களிடம் எந்த வித முன்னறிவிப்புமின்றி மறைமுகமாக கட்டணத்தை உயர்த்துவது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத மோசடியாகும். பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.1500 கோடி அளவுக்கு உயர்த்திய தமிழக அரசு, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே பேருந்துக் கட்டணத்தை கொல்லைப்புற வழியில் உயர்த்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 16&ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரி மற்றும் கட்டண உயர்வு சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு, அவற்றுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று செயல்படுவது தான் முறையாகும். அதற்கு மாறாக  கட்டண உயர்வை அறிவிக்காமலேயே அதிகக்கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது வழிப்பறிக்கு சமமான செயலாகும். இது வாக்களித்த, வரி செலுத்தும் மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.
இது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதால் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயர்வை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒரு வாரத்திற்குள் கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால், அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் அனைத்து பணிமனைகள் முன்பும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி  போராட்டம் நடத்தப்படும்.
Previous
Next Post »
0 Komentar