தமிழக மாணவர்கள் கேட்பதை தமிழக அரசுக்குக் கவனப்படுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, கிராமப்புற மாணவர்களை மருத்துவம் படிக்கவிடாமல் தடுக்கும் வஞ்சகத் திட்டமான மத்திய அரசின் இந்த நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதுநாள் வரை அம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புத் அளிக்காததால் அது சட்டமாகவில்லை.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதியான மார்ச் 1ந் தேதிக்குள் அந்த மசோதா சட்டமாகிவிடும் என்றே மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்திற்குள்ளாயினர். குழப்பத்தின் காரணமாக வேறு வழியின்றி அவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடும் அல்லது விண்ணப்பிக்காமல் விட்டிருக்கவும்கூடும்.
தமிழக ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளாததாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டது. 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் உரிய அழுத்தம் கொடுக்காததே இதற்குக் காரணம்.
இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
வரும் மே 7ந் தேதி இந்த நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. குறுகிய காலமே இடைவெளி இருக்கும் நிலையில் அம்மசோதா உடனடியாக சட்டமானால்தால் தமிழக மாணவர்கள் தப்பிக்க முடியும். இல்லையென்றால் மாணவர்கள் மேலும் அதிக குளப்பத்திற்குள்ளாகி எதிர்காலமே பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.
தமிழகத்தில் மொத்தம் 3000 மருத்துவக் கல்லூரி இடங்கள் உள்ளன. அதில் 85 விழுக்காடு இடங்கள், அதாவது 2500 இடங்கள் தமிழக மாணவர்களுக்கே +2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கிடைத்து வந்தன. அதைக் கபளீகரம் செய்யும் வஞ்சக நோக்கத்தில்தான் இந்த நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது.
மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு எடுத்துக்கொண்டதுதான் இதற்கெல்லாம் காரணம். இப்படி மாநில உரிமைகளைப் பறிக்கும் காரியங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஆகவே வெள்ளம் தலைக்கு மேல் போவதற்கு முன் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். விரைவாக செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்பார்க்கிறது. வலியுறுத்தவும் செய்கிறது.
எனவே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும் மசோதாவிற்கு சட்ட அங்கீகாரத்தை உடனடியாகவே தமிழக அரசு பெற்றிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
Previous
Next Post »
0 Komentar