கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி.

தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டக்கூடிய வகையில் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடிய கட்சிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்”

- கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12-03-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு யாருக்கு உள்ளது?


தளபதி: தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இரு நாட்களாக நடைபெறுகிறது. நாளை அவற்றை பரிசீலனை செய்ய இருக்கிறோம். யார் யார் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்களோ அவர்களுக்கு நேர்காணல் நடத்தவுள்ளோம். அதன் பிறகு தலைவர் கலைஞர் அவர்களிடமும், பொதுச்செயலாளர் அவர்களிடமும் கலந்து பேசிய பிறகு நாளையோ அல்லது நாளைய மறுதினமோ யார் வேட்பாளர் என்பதை முறைப்படி அறிவிப்போம்.

செய்தியாளர்: இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன?

தளபதி: திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்கனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் ஆதரவு தருவதாக அறிவித்து இருக்கிறார். அதேபோல, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகீதீன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடப்போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். மனித நேய மக்கள் கட்சியும் அறிவித்திருக்கிறது. அதேபோல திரு.ஈஸ்வரன் தலைமையில் இருக்கக்கூடிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் அறிவித்திருக்கிறது. அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு எல்லாம் நான் இந்த நேரத்தில் திமுக சார்பில் என்னுடைய நன்றியையும், அவர்களுடைய அறிவிப்புகளுக்கு வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள மக்கள் நல கூட்டணியின் ஆதரவு தருவார்களா?

தளபதி: நீங்கள் சொன்னது நல்ல கருத்து. ஏற்புடைய கருத்து. குறிப்பாக இன்றைக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கக்கூடிய சசிகலா தலைமையில் இருக்கக்கூடிய ஒரு பினாமி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டும் வகையில், பாடம் புகட்டும் வகையில் இந்த ஆர்.கே. நகர் தேர்தல் நடந்திட வேண்டும். அதற்காக பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. எனவே, நீங்கள் கேட்பது போல கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருக்கலாம், வேறு சில கட்சிகளாக இருக்கலாம், இன்னும் சில கட்சிகள், அவை எந்த கட்சியாக இருந்தாலும், அவை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில் நிச்சயமாக திமுக அதை வரவேற்க தயாராக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்மென்றால், நீங்கள் கேட்டிருக்கக்கூடிய இந்த கேள்வியின் மூலமாக அவர்களுக்கு எல்லாம் நான் விடுத்திருக்கக்கூடிய அழைப்பாக கூட அவர்கள் கருதிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: தேர்தல் ஆணையத்தின் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வைத்திருக்கின்றன. இந்த நிலையில் இப்போது நடைபெறும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக, நேர்மையாக செயல்படும் என்று கருதுகிறீர்களா?

தளபதி: நியாயமாகத்தான் செயல்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு உகந்தது. நேற்றைக்கு கூட எங்களுடைய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தேர்தல் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ஏற்கனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கக்கூடிய திரு.ஜார்ஜ் அவர்கள், இப்போதுள்ள பினாமி ஆட்சிக்கு எந்த வகையில் எல்லாம் துணை நிற்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். குறிப்பாக, கூவத்தூரில் 122 பேர் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர்களுக்கு முழு பாதுகாப்பு அவருடைய தலைமையில் தான் நடந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சட்டமன்றத்தில் இருந்து எங்களை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் போடுவதற்கு, அவருடைய தலைமையில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகள் தான் உள்ளே வந்து இந்த காரியங்களை எல்லாம் செய்தார்கள். ஆகவே, அவர் கமிஷனராக இருந்தால், நிச்சயமாக நீங்கள் கேட்பது போல இந்த தேர்தல் நியாயமாக நடப்பதற்கு அது ஏதுவாக அமைந்திட முடியாது. அதனால் தான் அவரை உடனடியாக, முன்கூட்டியே மாற்றிட வேண்டும் என்று எங்கள் அமைப்பு செயலாளர் அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு நேற்றைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

செய்தியாளர்: ரேஷன் கடைகளுக்கு எதிரில் நாளை போராட்டம் நடத்துவதாக திமுக அறிவித்த பிறகாவது அரசு விழிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

தளபதி: அரசு விழித்தெழ வேண்டும் என்பதற்காக தான் இந்தப் போராட்டத்தையே நடத்துகிறோம். இப்போதும் விழிக்கவில்லை என்றால் அடுத்த கட்டப் போராட்டத்தை விரைவில் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படும்.

செய்தியாளர்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் படி மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கிறீர்களா அல்லது மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றீர்களா?

தளபதி: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடியவர்களுக்கு, இந்த பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டக்கூடிய வகையில் வகையில் இந்த இடைத்தேர்தல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் நான் அந்தக் கருத்தை முன் வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Post

0 Komentar