பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தீவிரமாக அணைக்கட்டி வருவது கொங்கு மண்டலத்திற்கு ஒரு மிகப்பெரிய வேதனையை கொடுத்திருக்கிறது

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தீவிரமாக அணைக்கட்டி வருவது கொங்கு மண்டலத்திற்கு ஒரு மிகப்பெரிய வேதனையை கொடுத்திருக்கிறது. கொங்கு மண்டலத்தின் குடி தண்ணீர் ஆதாரமாக விளங்குவதை தடுக்கின்ற முயற்சி மன்னிக்க முடியாத குற்றம். தமிழக அரசு அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் இதுவரை தீவிரம் காட்டவில்லை. கொங்கு மண்டலத்தில் பல அமைச்சர்களை வைத்திருந்தும் கேரள அரசின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 


இப்போது கொங்கு மண்டலத்தை சார்ந்தவர் முதலமைச்சரான பிறகுதான் கேரள அரசு மிக தீவிரமாக அணைக்கட்டி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டும்தான் ஏதாவது ஒரு வழியில் தடுக்க முடியும். கொங்கு மண்டல மக்கள் இப்போதைய முதலமைச்சரிடத்திலே வைக்கின்ற முதல் கோரிக்கை இதுதான். பவானி ஆற்றில் வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்தியதற்கு பின்னால் அவினாசி – அத்திக்கடவு பிரச்சினையை பற்றி பேசி எந்த பலனுமில்லை. தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சரை சந்தித்தோ, பாரத பிரதமரை சந்தித்தோ அல்லது நீதிமன்றங்களின் மூலமாகவோ அணைக்கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தின் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வாய்மூடி மவுனமாக ஏன் இருக்கிறீர்கள். கேரளாவிலே நடப்பது உங்கள் ஆட்சிதானே. கம்யூனிஸ்ட் முதலமைச்சர் தானே பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுகிறார். கேரளாவிற்கு சென்று கேரள முதலமைச்சரை சந்தித்து அணைக்கட்டுவதை தடுக்க என்ன தயக்கம். உங்கள் ஆட்சியை கேரளாவில் வைத்துக்கொண்டு தமிழகத்திலே வெற்றுக்குரல் கொடுப்பதால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் தானே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அப்போதைய முதலமைச்சரை வசைப்பாடியவர்கள். அதேநிலையை நீங்களும் இன்று கடைப்பிடித்தால் தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டுகின்ற காலம் வெகுதொலைவில் இல்லை.
Previous
Next Post »
0 Komentar