விவசாயம், மீன்பிடி தொழில், பால் உற்பத்தி போன்ற கிராமப்புற மக்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான வங்கி கடனுதவி திட்டத்தை ரூ.15,000 கோடி அளவில் மத்திய கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி மறு நிதி அளிப்பு மூலம் தமிழகத்தில் செயல்படுத்த கோருதல்

பெறுநர் :
         உயர்திரு. K. பழனிச்சாமி அவர்கள்,
          மாண்புமிகு முதலமைச்சர்,
          தமிழ்நாடு அரசு,
          சென்னை.  

மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு,

  பொருள் :விவசாயம், மீன்பிடி தொழில், பால் உற்பத்தி  போன்ற கிராமப்புற
             மக்கள்  பொருளாதார  மேம்பாட்டுக்கான  வங்கி  கடனுதவி
             திட்டத்தை  ரூ.15,000 கோடி  அளவில் மத்திய கிராமப்புற
             வளர்ச்சிக்கான  தேசிய வங்கி மறு நிதி அளிப்பு (NABARD Refinance)
             மூலம் தமிழகத்தில் செயல்படுத்த கோருதல் – தொடர்பாக.
                                          ***
     வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி அளிப்பு திட்டம் ஒன்றை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.
    இதன்படி அந்தந்த பகுதிக்கேற்ற மேம்பாட்டுக்கான கடனுதவி திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
   வேளாண் நுட்பம், பால் உற்பத்தி, மீன்வள மேம்பாடு, கோழிப்பண்ணை மேம்பாடு, தோட்டப்பயிர் சாகுபடி மற்றும் பூ வகைகள் அபிவிருத்தி ஆகிய 6 வகையான தொழில் முனைவோருக்கு 2016-17 முதல் 2018-19 வரை மூன்று ஆண்டுகளுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது.
   விவசாயத்துக்கான மூலதனத்தை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி திறனை கூடுதலாக்கி உற்பத்தியை அதிகரிப்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
   இதனால் விவசாயத்துக்கு கூடுதலான மூலதனத்தை வழங்குவது தற்போது மத்திய அரசின் மிக முக்கிய கொள்கையாக்கப்பட்டுள்ளது.
   இந்த நோக்கத்துடன் அந்தந்த பகுதிகேற்ற திட்டத்தை (Area Based Schemes) இனம் கண்டு அதனை சிறு சிறு திட்டங்களாக, திட்ட வடிவங்களாக உருவாக்கி
-2-

அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், தொழில் முனைவோர்கள் அடங்கிய சிறு குழுக்கள் மூலம் செயல்படுத்த NABARD முனைந்துள்ளது.
   எனவே முதலாவதாக, வேளாண் நுட்பம், நண்ணீர் மீன் வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவற்றில் இதை செயல்படுத்தி, பல மாநிலங்களில் அப்பகுதிக்கு ஏற்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
   பல மாநிலங்களில் இதற்கான மாநில அளவிலான வங்கியாளர்கள் கமிட்டி (SLBC) கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
   வங்கியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மாநில அளவிலான வங்கி கடன் ஆய்வு கமிட்டி (SLRC) கூட்டத்தினை முதன்மை வங்கி கூட்டி தமிழகத்துக்கான திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
   கடற்கரை பகுதியை மிக அதிகமாக கொண்ட தமிழகத்திற்கான திட்டத்தை இந்த மாநில சூழலுக்கு ஏற்ப திட்டமிடல் அவசியம்.
   பல்வேறு மாநிலங்களில் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் பாதி அளவு கூட மக்கள் தொகை இல்லாத, ஒரிசா மாநிலத்தில் கூட இதற்கென ரூ.6 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
   எனவே, தமிழக சூழலுக்கு ஏற்ப விவசாய நுட்ப முறை, ஆழ்கடல் மீன்பிடித்தல், அண்மைக்கடல் மீன்பிடித்தல், உள்நாட்டு நீர் நிலை மீன் உற்பத்தி, கடலில் வளர்ப்பு மீன் தொட்டியில் மீன் உற்பத்தி, மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி, கால்நடை அபிவிருத்தி, கோழிகள் வளர்ப்பு, தோட்டக்கலை மேம்பாடு, பூக்கள் உற்பத்தி போன்ற விவசாயம் சார்ந்த கிராமப்புற பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை, திட்டமிட்டு செயல்படுத்த வங்கியாளர்களை கூட்டி குறைந்தபட்சம் ரூ. 15,000 கோடி கடனுதவி வழங்க முடிவு எடுக்க வேண்டும்.
   எனவே மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு வேளாண் அமைச்சர், மாண்புமிகு கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு கூட்டுறவு அமைச்சர் ஆகியோர் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி,
                                                    தங்களன்புள்ள,
                                                   மா. இளங்கோ,
                                                தலைவர்,
                                                       தேசிய மீனவர் பேரவை.

                                                        
Previous
Next Post »
0 Komentar