தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி.
அமைச்சர்கள் அறிவிப்பு துரதிஸ்ட்டவசமானது.
தமிழ்நாடு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகப் பெய்கின்ற பருவமழையின் அளவு 60 முதல் 80 சதம் வரை குறைந்துவிட்டது. அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. கூட்டுறவு வங்கிகளிலும், தேச உடமைவங்கிகளிலும் விவசாயிகளுக்கு 20 சதத்திற்கு மேல் கடன் வழங்கப்படுவதில்லை. கந்துவட்டி மற்றும் அதிகவட்டி வசூலிப்பவர்களிடம் கடன்பெற்று விவசாயம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக இருந்ததைவிட இவ்வாண்டு 50 சதம் தாணிய விளைச்சல் குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளன விவசாயிகள் இவ்வாண்டும் மிகவும் அதிகமான பாதிப்பில்சிக்கி செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள் நெல் மற்றும் புன்செய்பயிர்கள் அனைத்து மாவட்டங்களிலும் கருகிப் போய்விட்டன். நிலத்தடிநீர்வற்றிப் போனதால் குடிநீர் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில் விவசாயத்திற்காகப் பெற்ற கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று வேதனை தாங்காமல், மனமுடைந்து மாரடைப்பினாலும், தற்கொலை செய்து கொண்டும் 155 க்கு மேற்பட்ட விவசாயிகள் காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உயிர்விட்டுள்ளனர். அவர்களது மரணம் அந்தக் குடும்பத்திலுள்ளவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. விவசாயிகளுக்கு பல நெருக்கடிகள் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிகளை மதிப்பீடு செய்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆய்விற்காக சென்ற அமைச்சர்கள் விவசாயிகள் மரணத்தை கொச்சைப் படுத்தும் வகையில் உடல் உபாதைகள் வயது முதிர்வு போன்ற காரணங்களால் இறந்துள்ளதாகவும், எதிர்கட்சிகள் அவசியமற்ற பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக உண்மைக்குமாறான செய்திகளை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் படும் துயரங்களை புரிந்து கொள்ளாதவர்களாக அமைச்சர்கள் இருப்பது துரதிஸ்டவசமானது. ஆகவேஅமைச்சர்கள்தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டு உண்மை தன்மைகளைக் கொண்ட அறிக்கையை வழங்க வேண்டும். பாதிப்பிற்கேற்ப நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வற்புருத்துகிறோம்.
இவண்
வே.துரைமாணிக்கம்
0 Komentar