விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம் தலித் இளைஞர் தீ வைத்து எரித்து கொலை - குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் காலனியைச் சேர்ந்த சதீஷ் (23) என்ற தலித் இளைஞன் 04.01.2017 அன்று இரவு சுமார் 10 மணியளவில் ரசபுத்திரப்பாளையம் ஏரிப்பகுதியில் மின்கம்பத்தில் லுங்கியால் கட்டி உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் குடியிருப்புப் பகுதிக்கு ஓடிவந்து மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கிச் சென்று அரியூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதுச்சேரி மாஜிஸ்திரேட் அவர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சிகிச்சை பலனின்றி 06.01.2017 அன்று உயிரிழந்துள்ளார்.
31.12.2016 இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரு சாதி இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான முன்விரோதத்தின் காரணமாக இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இதில் கண்டமங்கலம் காவல்துறை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது மட்டுமல்லாமல், முதலில் புகாரையே வாங்க மறுத்துள்ளனர். பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பிற்கு பின்னர் சதீஷ் மின்கம்பத்தில் ஏறியதால் ஏற்பட்ட விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள் மின்விபத்து நடைபெறவே இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். கண்டமங்கலம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் சாதிய பாகுபாட்டுடன்
நடப்பது நன்கு புலனாகிறது. சதீஷ் இறந்த பிறகு கொலை வழக்காக மாற்றாமல் இ.த.ச. பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என மாற்றியுள்ளனர். இது வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை கண்காணிப்பாளரும் தலையிட்டு உடனடியாக இவ்வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமெனவும்; குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் கண்டமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; சதீஷ் குடும்பத்தினருக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி எரித்துக் கொல்லப்பட்ட சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
0 Komentar