நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாத வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் தற்கொலை
செய்தும், அதிர்ச்சியாலும் மரணடைந்து வருகின்றனர். வேலையிழப்பால் விவசாயத்
தொழிலாளர்கள் பரிதாபகரமான துயரநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
முழுவதையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், போர்க்கால
வேகத்தில் நிவாரணம் பணிகள் தொடங்க வேண்டும் என கடுமையான போராட்டங்கள்
நடைபெற்றன. திருவாரூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில்
விவசாயி ஆர்.மகாலிங்கம் உயிர் பலியானதால் போராட்டங்கள் தீவிரமடைந்த
நிலையில் அமைச்சர்கள் குழு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப்ப
பிரிதிநிதிகளை அழைத்து பேசியது. அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிக்கை
பெற்றது.
இதன் மீது இன்று(10.01.2017) அரசு வெளியிட்ட அறிவிப்பு பலத்த
ஏமாற்றம் அளித்துள்ளது. யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போல்
பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச
உயிர்வாழ்வுத் தேவைக்கும் உதவாதது. தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுவதை
ஒப்புக்கொண்ட அரசு, நிலவரியை ரத்துசெய்தும் விவசாயிகள் கடன்களை
நீண்டகாலக்கடன்களாக மாற்றியிருப்பதுயும் ஏடுகளில் உள்ள கணக்குகளை மாற்ற
உதவும். உயிர்விட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது.
காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் இழப்பீடு நிதியை அரசின் நிவாரணம்
போல் கணக்கிட்டு, காட்டியிருப்பது நேர்மையான செயல் அல்ல. பயிர் இழப்பிற்கு
ரூ 3000 முதல் 5465 வரை அறிவித்துள்ள போதிலும் இழப்பீட்டை கணக்கிட்டு
மதிப்பீடு செய்வதில் குழப்பங்களுக்கு இடமளித்துள்ளது. விவசாயத் தொழிலாளர்
குடும்பங்களுக்கு நிவாரணநிதி எதுவும் அறிவிக்கப்படாதது அடித்தட்டு மக்களின்
மீது அரசு காட்டும் அலட்சியப் போக்கின் அடையாளமாகும். வேலைநாட்களை
உயர்த்தியவர்கள், ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க முன்வராதது ஏன்?.
தூர்வாருவது, ஏரி, குளங்கள் ஆழப்படுத்துவது, வன உயிரினங்களுக்கு குடிநீர்
வழங்குவது என ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் பணியில் காட்டிய ஆர்வம்,
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலனை காப்பதில் காட்டவில்லை. அரசின்
அறிவிப்பால் ஏமாற்றப்பட்டுள்ள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்
ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் தான் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பை
உறுதிபடுத்தும் என்பதை அரசு அறிவிப்பு உணர்த்தியுள்ளது. அரசின் அறிவிப்பு
வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியுள்ளது. அரசு அறிவிப்பை மறுபரிசீலனை
செய்யவேண்டும், உரிய நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என தமிழ்மாநில விவசாயத்
தொழிலாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
(நா.பெரியசாமி)
பொதுச் செயலாளர்
0 Komentar