தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள வறட்சி நிவாரணம் பற்றிய அறிக்கை முறையான ஆய்வின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளதாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி.
இன்றைய தினம் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள வறட்சி நிவாரணம் பற்றிய அறிக்கை முறையான ஆய்வின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளதாகத் தெரியவில்லை.
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்கள் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
1876 ஆம் ஆண்டிற்குப்பின் இந்த ஆண்டுதான் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சராசரி மழை அளவைவிட 65 முதல் 80 சதம் வரை மழை குறைந்துள்ளது. தானியவிளைச்சலும் குறைந்துள்ளது. மழைக்குறைவினால் ஏற்படும் வறட்சி மக்களின் வாழ்வாதாரத்தையே நிலைகுலையச் செய்துவிடுகின்றது. நெல் சாகுபடி துவங்கி, கரும்பு, வாழை, பருத்தி, சோளம் உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் பாதிப்புக்குள்ளாகிவிட்டன. மக்களின் உணவுப்பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பி உயிர்வாழ்வதால் தமிழ்நாட்டில் பெரும் சோதனையிலும், வேதனையிலும் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் அவர்களைப் பாதுகாக்கும வகையில் இல்லை. நெல்பாதிப்பிற்கு ஏக்கருக்கு 5465 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பயிருக்கும் எவ்வளவு செலவாகும் என்று அரசின் மதிப்பீட்டுக்குழு கணக்கிடுவது வழக்கத்தில்உள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு நெல்லுக்கான செலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25,500 என்று மதிப்பிட்டுள்ளது. இவை போன்ற மதிப்பீடு அனைத்துப் பயிர்களுக்கும் உண்டு. ஆகவே மாவட்ட வாரியாக ஆய்வு செய்த குழுக்களின் ஆய்வு தெளிவானதாக இல்லை என்று தெரிகின்றது.
மஞ்சள், கரும்பு காப்பீடு செய்திருந்தால் இழப்பிற்கேற்ப நிவாரணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிடவேண்டிய அவசியமில்லை. இந்த நிவாரணத்தை பயிர்காப்பீட்டு நிறுவனம் வழங்கிடும்.
விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய காலக்கடன்களை, மத்திய காலக்கடனாக மாற்றப்படும் என்பது பாதுகாப்பானதல்ல அவர்கள் பெற்றுள்ள அனைத்துப் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மிகக்குறைந்த அளவான நிலவரியை மட்டும் தள்ளுபடி செய்வது ஏமாற்றமளிக்கிறது.
விவசாயம் அழிந்துபோனதால் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியால் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் தலா ரூ 3 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மற்றவர்களை வஞ்சிப்பதாக உள்ளது. ஆகவே உயிர்விட்ட அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மானாவாரிப் பயிர்களுக்கு ரூ 3000 என்று அறிவித்திருப்பதும் பொருத்தமானதல்ல. நீர்நிலைகளை தூர்வார ஒதுக்கியுள்ள ரூ 3400 கோடி என்பது இன்றைய சூழலில் போதுமானதல்ல. விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி வேலைஉறுதித்திட்டத்தின்  கீழ் வேலை நாட்களை உயர்த்தி இருப்பதும் போதுமானதல்ல. அவர்களுடைய குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தினக்கூலியையும் கலிக்க வேண்டும். ஆகவே இந்த அறிவிப்புக்களை மறுபரிசீலனை செய்து மத்திய அரசிடம் போதிய நிதியைப் பெற்று உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
 வே.துரைமாணிக்கம் 

Related Post

0 Komentar