பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொது விடுமுறையை ரத்து செய்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு கடும் கண்டனம்! மத்திய அரசே! உத்தரவை உடனே திரும்ப பெறு!

பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொது விடுமுறையை ரத்து செய்த  மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு கடும் கண்டனம்! மத்திய அரசே! உத்தரவை உடனே திரும்ப பெறு!



தமிழகத்தின் வாழ்வுரிமைகளை இல்லாது ஒழிக்கவும் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு நாள்தோறும் இந்திய பாஜக அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்வெளிப்பாடாக தற்போது தமிழரின் தேசிய திருநாளான பொங்கல் திருநாளுக்கான பொதுவிடுமுறையை ரத்து செய்துவிட்டது மத்திய பாஜக அரசு.

பொங்கல் திருநாள் என்பது தமிழரின் ஒரே ஒரு பண்பாட்டு அடையாளம். பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழர் வாழ்வியலோடு இணைந்த இந்த இனத்தின் அடையாளத் திருநாள். பொங்கல் திருநாள், அதற்கு மறுநாள் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழினம் கடைபிடித்து வரும் பண்பாட்டு நிகழ்வு. முதலில் ஜல்லிக்கட்டை முடக்கிய இந்திய அரசு இப்போது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான தமிழர் தேசிய திருவிழாவான பொங்கல் திருநாள் விழாவை அழிக்க களமிறங்கியுள்ளது.
இதுவரை பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசோ இதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்திய மத்திய அரசின் பணியாளர்களாக இருக்கும் தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுவதை தடுக்கும் சதிச்செயல்தான் இது.

தமிழர்கள் இனரீதியாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்ற மனுவாத சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த தான்தோன்றித்தனமான முடிவு. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக எங்கள் தமிழ் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிவந்து போராட துணிந்துவிட்டனர்.

இந்த எழுச்சியை எதிர்கொள்ள திராணியற்ற இந்திய மத்திய அரசு இப்போது பொங்கல் திருநாள் பொதுவிடுமுறை ரத்து என அறிவித்து எங்களது உணர்வுகளை கொந்தளிப்பை மடைமாற்ற நினைக்கிறது. இந்திய மத்திய பாஜக அரசு தமிழர்களின் இனமான உணர்வோடு விளையாடுவது என்பது தன் தலையில் நெருப்பை அள்ளி கொட்டுகிற செயல்தான்.

இதுபோன்ற இனமான உணர்ச்சிகளோடு விளையாடிப் பார்த்தால் விளைவுகள் எப்படியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்திய மத்திய அரசுக்கு தமிழக இளைஞர்கள் உணர்த்தப் போகும் காலம் வந்துவிட்டது. தமிழ் மக்களின் இனஉணர்வு கிளர்ந்தெழுந்தால் இந்திய துணைக்கண்டமே தாங்காது என்பதை மோடிகள் நினைவில் கொள்ளட்டும்.

தமிழரின் மான உணர்ச்சியை சீண்டிப் பார்க்கும் இத்தகைய அறிவிப்புகளை இந்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெறுவதுதான் அந்த அரசுக்கும் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும் நல்லதாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது.

Related Post

0 Komentar