ஆந்திர மாநில திமுக அமைப்பாளர் கே.ஏ.முனுசாமி திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மறைந்த ஆந்திர மாநில திமுக அமைப்பாளர் கே.ஏ.முனுசாமி திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்’


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (08-01-2017) ஆந்திர மாநில திமுகழக அமைப்பாளர் கே.ஏ.முனுசாமி அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

”திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆந்திர மாநில அமைப்பாளராக இருந்து இந்த மாநிலத்தில் கழகத்திற்கென்று ஒரு மிகப்பெரிய பெருமையை, மதிப்பை, மரியாதையை உருவாக்கித் தந்து இந்த இயக்கத்திற்காக, தலைவர் கலைஞர் அவர்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு பணியாற்றி, இந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவராக விளங்கிய நம்முடைய அருமைக்குரிய கே.ஏ.முனுசாமி அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் மறைந்து விட்டார்கள். அவருடைய மறைவுச்செய்தி, தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தால் எங்களுக்குக் கிடைத்தது. இச்செய்தியைக் கேட்டதும் நாங்கள் எல்லாம் அதிர்ச்சிக்கு ஆளானோம். உடனடியாக நம்முடைய பொன்முடி அவர்கள், அமைப்புச் செயலாளர் அவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி, அரசு பொது மருத்துவமனைக்கு நாங்கள் சென்றோம். அங்கிருந்த அவருடைய உடலுக்கு இறுதி வணக்கத்தை, இறுதி அஞ்சலியை நாங்கள் செலுத்தினோம். அந்த நேரத்தில் நமது முனுசாமி அவர்களின் அருமை மகன் மூர்த்தி அவர்களும், அவருடைய துணைவியார் அவர்களும், குடும்பத்தை சார்ந்தவர்களும் என்னிடத்தில் வேறு எதையும் கேட்கவில்லை, ஒன்றை மட்டும் தான் கேட்டார்கள், தலைமைக் கழகத்தில் இருந்து யாராவது ஒருவர் எங்கள் ஊருக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய, மரியாதை செலுத்தக்கூடிய காரியத்தை செய்திட வேண்டுமென்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள்.

நான் அவர்களிடத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருக்கின்ற காரணத்தினால் நான் வரும் வாய்ப்பு கிடையாது, இருந்தாலும் நம்முடைய பொன்முடி அவர்களும், பக்கத்தில் உள்ள மாவட்டத்தின் செயலாளர் வேணு அவர்கள், ஆவடி நாசர், காந்தி போன்றவர்கள் நிச்சயமாக அங்கு வருவார்கள், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தேன். அதன் பிறகு தலைமைக் கழகத்தை சார்ந்த அவர்கள் எல்லாம் இந்த பகுதிக்கு வந்து, திமுக சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள்.

அதன்பிறகு, ஒரு வார காலத்திற்கு பிறகு மூர்த்தி அவர்களும், அவருடன் சில நண்பர்களும் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலன் குறித்து விசாரிக்க கோபாலபுரத்திற்கு வந்தார்கள். அப்படி வந்த நேரத்தில் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, திரு.முனுசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று சொன்னபோது, அவர்கள் கூட நான்  இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை, நானாகவே அவர்களிடத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு நானே வருகிறேன் என்று சொன்னேன். காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் என்னால் அவருடைய ஊருக்கு நேரில் வர முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது, எனவே, படத்திறப்பு விழாவில் பங்கேற்க நான் ஒப்புதல் தந்து, அதன் பிறகு இங்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

ஆக, ஆந்திர மாநிலத்தில் கழகம் வேரூன்றுவதற்கு காரணமாக இருந்தவர்களில் திரு.கே.ஏ.முனுசாமி அவர்கள் முக்கியமானவர் என்று சொன்னால் அது மிகையாகாது. முனுசாமி அவர்கள் ஒரு போராளியாக இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த வட்டாரத்தில் ஒரு சிங்க நடை போட்ட செயல்வீரராக விளங்கியவர். பேரறிஞர் அண்ணா அவர்களால், 1949 ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் கிளைக்கழகங்களை உருவாக்கித் தந்தவர். அப்போதெல்லாம், ஒரு கிளைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் எப்படிப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் அவர் சந்தித்திருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் எதிர்கொண்டு, சகித்தபடி செயல்பட்ட ஆற்றலாளர் தான் முனுசாமி அவர்கள்.

அதுமட்டுமல்ல, இந்த பகுதியில் கழகத்தை உருவாக்க, கழகத்தை வளர்க்க அவர் நமது கழகத்தின் இருவர்ணக் கொடிகளை அமைத்தபோது, அவை எல்லாம் பல இடங்களில் வெட்டி சாய்க்கப்பட்டு இருக்கின்றன. அந்த நேரங்களில் எல்லாம் அவர் உடனடியாக அதே இடங்களில் திமுக கொடிகளை வைக்க வேண்டுமென்று செயல்பட்டவர். இந்த மாநிலத்தின் பல இடங்களில், நூற்றுக்கணக்கான இடங்களில் கழகத்தின் இரு வர்ண கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன என்று சொன்னால், அதற்கெல்லாம் காரணம் நமது முனுசாமி அவர்கள் தான் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

தனது சிறு வயதிலேயே, சுமார் 8 வயதிலேயே சுய மரியாதை இயக்கத்தின் மீது பற்று கொண்டு தன்னை பெரியாரின் பாதையில், அறிஞர் அண்ணா வகுத்துத் தந்த பாதையில், தலைவர் கலைஞர் அவர்களின் வழி நின்று இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நமது முனுசாமி அவர்கள். ஆரம்பத்தில், அவரது பெற்றோரும், இப்பகுதியில் இருக்கக்கூடியவர்களும் ஒரு போக்கிரி பையன் என்று அழைக்கப்படும் நிலையில் தான் அவர் இருந்திருக்கின்றார். ஆக, அப்படிப்பட்ட முனுசாமி அவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, பக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வானகரம் பகுதியில் இருக்கக்கூடிய பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்து இருக்கிறார்கள். விடுதியில் தங்கியபடி அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அவர்கள் எங்கெல்லாம் கூட்டங்களில் பேசுகின்றாரோ அங்கெல்லாம் முதல் ஆளாகச் சென்று, அவரது பேச்சைக்கேட்டு, ரசித்து, அதனை உள்வாங்கி, அதன் பிறகு இந்த இயக்கத்தில் பணியாற்றும் உணர்வை பெற்றவர் நமது முனுசாமி அவர்கள்.

1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட நேரத்திலேயே, அவர் ஆந்திராவின் உள்ள பகுதிகளில் கிளைக்கழகங்கள் தொடங்கி இருக்கின்றார், தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நடத்திய நாடகம், பரப்பிரம்மம் என்ற நாடகம். அந்த நாடகத்தை இந்தப் பகுதியில் நடத்திட வேண்டும் என்று இவர் அந்த வட்டார நண்பர்களோடு சேர்ந்து கொண்டு, பல இடங்களில் அந்த நாடகத்தை நடத்தியவர் நமது முனுசாமி அவர்கள். அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரிடத்தில் நன்மதிப்பைப் பெற்றவர் முனுசாமி அவர்கள். இந்த பகுதிகளுக்கு அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார். அதேபோல தலைவர் கலைஞர் அவர்களையும் அழைத்து வந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார். ஆக, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட ஒரு சிறந்த செயல்வீரராக விளங்கியவர் நமது முனுசாமி அவர்கள்.

அவர் அடிக்கடி எல்லோரிடத்திலும் சொல்வது என்னவென்று கேட்டால், "எனக்கு எந்தத் தொழிலும் செய்யத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே தொழில் திராவிட முன்னேற்றக் கழகப்பணிதான். என்னுடைய மூதாதையர்கள், பெற்றோர் வேண்டிய அளவுக்கு சொத்துக்களை வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆகவே, அதையெல்லாம் எடுத்து திமுக கூட்டத்தை நடத்துவேன்”, என்று சொல்லி, கழகம் தான், தலைவர் கலைஞர் தான், அறிஞர் அண்ணாதான், தந்தை பெரியார் தான், இந்த இயக்கம் தான் என்ற லட்சிய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர் நம்முடைய முனுசாமி அவர்கள்.

ஒவ்வோர் ஆண்டும் முப்பெரும் விழா நடத்துகிறோம். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், திமுகவின் பிறந்தநாள் ஆகிய மூன்று தினங்களையும் கொண்டாடுவது தான் முப்பெரும் விழா. ஆக, அப்படி முப்பெரும் விழா கொண்டாடுகின்ற நேரத்தில் கழகத்திற்காக பாடுபட்டு இருக்கக்கூடிய, கழகத்திற்காக தியாகங்களை செய்திருக்கக்கூடிய, கழகத்தின் வளர்ச்சிக்காக தங்கள் ரத்தத்தை சிந்தியிருக்கக்கூடிய தியாக சீலர்களுக்கு கழக உழைப்பாளிகளுக்கு, தந்தை பெரியார் விருது, அறிஞர் அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது ஆகிய விருதுகளை வழங்குவதுண்டு. ஆக, அப்படிப்பட்ட நிலையில் நமது முனுசாமிக்கு, 2007 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவின்போது தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணா விருதினை நமது முனுசாமிக்கு மகிழ்ச்சியோடு, உள்ளன்போடு அளித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆக, இன்றைக்கு நமது முனுசாமி அவர்கள் நம்மிடத்தில் இல்லை.

இங்கு என்னை அழைத்து வர வேண்டும் என்று நமது முனுசாமி அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், கட்சிப்பணி, பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு பணிகள் என்று தொடர்ந்து இருந்ததால், என்னால் அந்தச் சூழ்நிலையில் இங்கு வரமுடியவில்லை. அவர் அறிவாலயத்திற்கு பலமுறை வருவார். சென்னையில் மட்டுமல்ல பல மாவட்டங்களில் நடக்கக்கூடிய திமுக நிகழ்ச்சிகளில் எல்லாம் நமது முனுசாமி அவர்கள் வந்து விட்டு செல்வதை நான் பார்த்ததுண்டு.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வருகிறது என்று சொன்னால் தேர்தல் நிதி என்று தலைவர் அறிவிப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் போட்டி போட்டுக் கொண்டு, தேர்தல் நிதியை தலைவர் கலைஞரிடத்தில் ஒப்படைப்பார்கள். அந்த நேரங்களில், ஆந்திர மாநிலத்தின் சார்பில் நாங்களும் நிதி தருகிறோம் என்று சொல்லி, நிதி திரட்டி, அதனைக் கொண்டு வந்து அறிவாலயத்தில் தலைவர் கலைஞரிடத்தில் பார்க்கக் கூடிய காட்சிகளை எல்லாம் நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம்.
ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அவர் அறிவாலயத்திற்கு வருவார். கட்சியில் கிளை அமைப்புகளை பற்றி பேசுவார். என்னையும், அமைப்புச் செயலாளரையும் சந்திப்பார். தலைவரை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்பார். பார்த்தே ஆக வேண்டும் என சொல்லியதில்லை. நாங்களாக அவரை அழைத்துக் கொண்டு சென்று, தலைவரின் அறைக்கு அழைத்துச் சென்று பார்க்க வைப்போம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், இந்த இயக்கத்தின் மீது, தலைவர் கலைஞர் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை, பாசத்தை வைத்திருந்தவர் நமது முனுசாமி அவர்கள்.

ஆக, அப்படிப்பட்ட நமது முனுசாமி அவர்களின் திருவுருவப் படத்தினை நாம் இன்று திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், உள்ளபடியே இது ஒரு வேதனைக்குரிய நிகழ்ச்சிதான். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்ச்சிதான். இருந்தாலும், இன்றைக்கு அவர் மறைந்தும் மறையாமல் நம் உள்ளத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆக, அவருடைய திருவருவப் படத்தை திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், அவர் விட்டுச் சென்றிருக்கக்கூடியப் பணிகளை, இன்றைக்கு அவர் வழி நின்று, இந்த பகுதியில் பணியாற்றக் கூடிய நமது கழக நிர்வாகிகள், அதேபோல அவருடைய குடும்பத்தினைச் சேர்ந்த அன்புச் செல்வங்கள், நிச்சயமாக அந்தப் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப உண்டு. எனவே, அந்த நம்பிக்கையுடன் என்றைக்கும் தலைமைக் கழகம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும், எங்களால் முடிந்த அளவிற்கு எல்லாவகையிலும் உங்களுக்கு ஒத்துழைப்பு தர காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, முனுசாமி கண்ட கனவை நாம் நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் கருதிட வேண்டுமென்று, மேடையில் இருப்பவர்களை மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு, வாழ்க முனுசாமி அவர்களின் புகழ், வெல்க முனுசாமி அவர்களின் தொண்டு என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.”


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Related Post

0 Komentar