பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணைக்கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்ட துவங்கியிருப்பது  கடும் கண்டனத்திற்குரியது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே ஆறு புதிய தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தேக்குவட்டை மற்றும் மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களிலும் தடுப்பணைகளை கட்டுவதற்கான கட்டுமான
பணிகளை துவங்கியும் இருக்கிறார்கள். பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகளையும் கேரள அரசு கட்டினால் பவானியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீர் முற்றிலுமாக நின்று விடும். பவானி ஆறுதான் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கப்பட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழியும் சூழ்நிலை உருவாகும். பல இலட்சம் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பாடுவார்கள். மத்திய, மாநில அரசுகள் கேரள அரசு அணைக்கட்டுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு கேரள அரசு சிறுவாணி குறுக்கே அணைகட்டுவதற்கான அனுமதியை மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தில் பெற்று அணைக்கட்ட முயற்சித்தபோது தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பால் மத்திய அரசு அந்த அனுமதியை திரும்ப பெற்றுவிட்டது. தற்போது பவானி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் அணைக்கட்டுவதற்கான பணியினை தொடங்கி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் கூட மவுனம் காப்பது வேதனையளிக்கிறது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக பிரதமர் அவர்களை சந்திக்க வேண்டும். கொங்கு மண்டலம் தண்ணீரின்றி பாலைவனமாக மாறுகின்ற அபாய சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கேர அரசு அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதை கண்டித்து வருகின்ற 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கோவையில் நடைபெறவிருக்கும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பங்கேற்கும்.

Related Post

0 Komentar