பூனைக்குட்டி வெளியே வந்தது! தமிழக அரசை கலைக்க சொல்வதா? தமிழகத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி நுழைய முடியாது!

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை பொங்கல் பண்டிகையின் போது நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழினமே போராடி வருகிறது.

கடல் கடந்த தேசங்களில் எல்லாம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

ஆனால் தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா துடித்து வருவது அப்பட்டமாக நாடே அறிந்த ஒன்று. தமிழகத்தில் நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.

இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கலைப்போம் என சுப்பிரமணியன் சுவாமிகள் மூலமாக மத்திய பாஜக அரசு மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசை மிரட்டுவது, கலைப்பது என்பது போன்ற ஜனநாயக விரோத நிகழ்வுகளை தமிழக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்போம்.

தமிழகத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி நுழைவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தடுத்து நிறுத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன். ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை காரணத்தை முன்வைத்து தம்முடைய குறுக்கு வழி அரசியல் அபிலாஷைகளை அடைய முயற்சித்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்விளைவுகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

Related Post

0 Komentar