ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை தமிழகத்தில் கடும் அதிர்ச்சி


கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை சில வழக்கறிஞர்கள் இன்று நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த
ஆணை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்திய போது,
இதுகுறித்த வழக்கை உடனடியாக எடுத்து விசாரிக்க முடியாது என கூறியது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுக்காததைக் கண்டித்து மத்திய - மாநில அரசுகளின் அலுவலகங்கள் முன்பாக நாளை (13.1.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் மனப்பூர்வமாக வரவேற்கிறது, ஆதரிக்கிறது.

கடந்த மே 2014 இல் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடையாணை விதித்த பிறகு அதை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு உருப்படியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினாலேயே தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு
நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது. 1960 இல் கொண்டு வரப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை வழங்கியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். இதை கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டு நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியும். அதற்கு மாறாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சாதாரண துறை சார்ந்த அறிவிக்கை மூலம் எதிர்கொண்டதால் அதை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது. இது தமிழக பா.ஜ.க.வை திருப்திபடுத்துவதற்காகவே இத்தகைய கபட நாடகத்தை மத்திய பா.ஜ.க. அரசு அரங்கேற்றியுள்ளது.
உச்சநீதிமன்றம் தடைவிதித்து 32 மாதங்கள் ஆனபிறகும் அதை செயலிழக்கச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு மனப்பூர்வமாக நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கலாம். இல்லையெனில் எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டம் இயற்றுகிற பா.ஜ.க. அரசு தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். இதை ஏன் செய்யவில்லை என்பதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியாக வேண்டும்.

இதற்கெல்லாம் தடையாக இந்திய விலங்குகள் நலவாரியம் இருப்பதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இந்திய விலங்குகள் நலவாரியம் தடையாக இருந்தால் அந்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய அமைப்பை பா.ஜ.க. அரசு நியமித்திருக்கலாம். காலம் காலமாக இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட திட்டக்குழு போன்ற அமைப்புகளையே கலைத்த பா.ஜ.க.வினர் இதை கலைக்க ஏன் முன்விரவில்லை ? ஏன் இந்த தயக்கம் ? கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி பொங்கலும், ஜல்லிக்கட்டும் நடக்கும் என்று கூறி ஏமாற்றியதைப் போல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக பா.ஜ.க. மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிற அ.தி.மு.க., மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை ? கடந்த 32 மாதங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க அ.தி.மு.க. எடுத்த முயற்சிகள் என்ன ? தும்பை விட்டு வாலை பிடிப்பதைப் போல கடைசி நேரத்தில் ஒப்புக்காக தமிழக முதலமைச்சர்
கடிதம் எழுதி கண்துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறார்.

எனவே, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்துள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஜல்லிக்கட்டு ஆதரவு எழுச்சி போராட்ட உணர்வுகளுக்கு அரசியல் வடிவம் கொடுக்கிற வகையில் திராவிட முன்னேற்ற கழகம் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
(சு. திருநாவுக்கரசர்)

Related Post

0 Komentar