மத்திய குழுவினர் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: ஈ ஆர். ஈஸ்வரன் அறிக்கை


மத்திய குழுவினர் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் வறட்சி பாதித்த இடங்களை ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களை மட்டுமே கண்துடைப்புக்காக பார்வையிட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மத்திய குழுவினர் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டால் மட்டுமே உண்மைநிலை என்னவென்று அவர்களுக்கு தெரியும். டெல்டா மாவட்டங்கள் மட்டுமில்லாமல் குறிப்பாக ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மக்கள் அனைவரும்  வறட்சியினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்கு மண்டல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் மேலாக கீழே சென்றுவிட்டதால் தற்போது குடிநீருக்கும், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. வறட்சியினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவேளை உணவிற்கே கஷ்டப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழகத்தில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.

தமிழக அரசின் மெத்தனப்போக்கினால்தான் இன்னும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படாமல் இருக்கிறது. தமிழக அரசு வறட்சி நிவாரணத்தை வழங்காமல் மத்திய அரசிடம் நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. மத்திய அரசும் தமிழகத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பியுள்ள மத்திய குழுவின் அறிக்கைக்கு காத்திருக்காமல் உடனடியாக தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள் வறட்சியை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவை பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Previous
Next Post »
0 Komentar