ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி
சென்னையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
சென்னையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக தன்னெழுச்சியாக போராடிவரும் மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சென்னை மாவட்டம் சார்பாக சென்னை கடற்கரை ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா தலைமை தாங்கினார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன், வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் அஜ்மல் கான், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசுக்கும், பீட்டா அமைப்பிற்கும் எதிராக கண்டன கோஷமிட்டனர்.
இப்போராட்டத்தில் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்ஸா; தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும் என கடைசிவரை நம்பிக்கை அளித்துவிட்டு, இறுதியில் கைவிட்டு தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றிய மத்திய அரசின் இந்த செயலைக் கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் இளைஞர்கள்-மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தை ஆதரித்தும், அவர்களின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரம்–பண்பாட்டை அழிக்கும் விதத்தில், பா.ஜ.கவும், பீட்டா அமைப்பும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆகவே, ஜல்லிகட்டை நடத்தும் விதத்தில் உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்ட கொண்டு வர வேண்டும். பீட்டா என்கிற தமிழக பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்க துணியும் சர்வதேச கார்ப்பரேட் அமைப்பை உடனே தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகம் முழுவதும் எழுச்சி பெற்றுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. வாழ்த்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இப்படிக்கு
ஏ.கே.கரீம்
மாநில ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
0 Komentar