காவல்துறையின் கடுமையான தாக்குதலை எதிர்த்து ஜனவரி 28 அன்று கண்டன இயக்கம்- மக்கள் நலக் கூட்டியக்கம்
சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கூட்டறிக்கை
---
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்கள் - இளைஞர்கள், பெண்களின் தமிழகம் தழுவிய போராட்டம் ஒருவார காலமாக நடைபெற்றது. மாணவர்கள் - இளைஞர்கள், பெண்களின் எழுச்சியும், பொதுமக்களின் ஆதரவும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தின் விளைவாக சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் ஒருவார காலம் போராடிய இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் மீது தமிழக காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழகமெங்கும் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தீ வைப்பு சம்பவங்களை நடத்தி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி மாணவர்களையும் - இளைஞர்களையும் - பெண்களையும் ஓட, ஓட விரட்டித் துரத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளம் பெண்களும், பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களின் வாகனங்கள் பல இடங்களில் காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது - தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து பலரை பிடித்துச் சென்று, இரவெல்லாம் காவல்நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். தேடுதல் என்ற பெயரால் சென்னை நகரம் முழுவதும் இளைஞர்கள் - மாணவர்கள், பொதுமக்களை இன்றும், இப்போதும் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்டவர்களை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் விரோதமான தமிழக அரசின் இத்தகைய காட்டுதர்பாரையும், காவல்துறையின் கொடூரத் தாக்குதலையும் மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்றும், இன்றும் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தொடர்ந்து கைது செய்வதை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தியும் சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் ஜனவரி 28, 2017 அன்று சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை தொடுத்த வன்முறை வெறியாட்டச் சம்பவங்கள் குறித்த உண்மை விபரங்களை வெளிக்கொணரும் வகையில் ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்கலாமா என்ற வேண்டுகோளை நீதியரசர் ஏற்றுக் கொண்டார். அதனடிப்படையில் நீதியரசர் தலைமையில் உண்மை அறியும் குழு செயல்படும்.
மாநில அரசு அவசரச்சட்டம் பிறப்பித்த பிறகு தமிழகத்தில் சில இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஒரு காவலர் உள்ளிட்டு 4 பேர் இறந்து விட்டனர். இறந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும். மேலும், உரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்திட மாநில அரசு வழிகாட்டிட வேண்டும்.
0 Komentar