தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2017-18க்கான தமிழக ஆளுநரின் உரை தமிழக மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வுகள் எதையும் சொல்லாமல் வெறும் சடங்கு உரையாக அமைந்துள்ளது.
தொடர்ந்து தமிழகம் இயற்கை இடர்பாடுகளால் பாதித்து வருகிறது. 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கடும் வறட்சி; 2015 வரலாறு காணாத மழை வெள்ளச் சேதம்; மீண்டும் 2016ம் ஆண்டு சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வர்தா புயல் பாதிப்பு, இதர மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு என தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பகுதி மக்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். வறட்சியால் நடப்பு ஆண்டு மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவரை 240க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார்கள்.
இத்தகைய மோசமான நிலையிலிருந்த மக்களை பாதுகாத்திட உருப்படியான மாற்று திட்டங்களோ, போதுமான நிவாரண உதவிகள் அளித்து மக்களை காப்பாற்ற திட்டங்களோ ஏதும் ஆளுநர் உரையில் இடம் பெறாதது பெருத்த ஏமாற்றமளிப்பதாகும்.
மத்திய மோடி அரசின் 500, 1000 ரூபாய் பண நோட்டுக்கள் செல்லா நடவடிக்கையால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டவர்கள் உட்பட அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் மாநிலத்தின் நிதி வருவாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அழுத்தமாக குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கைகயை கண்டிப்பதுடன் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வலியுறுத்த வேண்டிய நேரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை நீண்ட கால பயனை ஏற்படுத்தும் என பூசி மெழுகுவது உண்மையை திரையிட்டு மறைக்கும் முயற்சியாகும். அதுபோன்றே மாநிலங்களுக்கிடையிலான நிதி பகிர்வதில் மத்திய அரசின் அணுகுமுறையால் தமிழகம் வேறு எந்த மாநிலத்தையும் விட மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் 14வது நிதிக்குழு மாநிலங்களுக்கான பங்கினை உயர்த்தியபோதிலும் மத்திய அரசு நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பினை மத்திய அரசு உயர்த்திவிட்டதால் தமிழ்நாட்டின் நிதி நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள உதய் திட்டத்தில் தமிழக அரசும் இணைந்துள்ளதால் மின்வாரியத்தின் ரூ. 22815 கோடி கடனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழகத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் கூடுதலாக ரூ. 2730 கோடி செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளான போதும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கவோ அல்லது தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தவோ துணிவற்ற நிலையில் இருப்பதன் மூலம் தமிழக நலனை காவு கொடுப்பதாக உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்படுவதோடு மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை திரும்ப அளிக்க மறுத்து வருவதுடன் அவைகளை அரசுடைமையாக்குவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனை தடுப்பதற்கும் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடி தொழில் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வற்புறுத்துவதற்கு மாறாக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
வேலையற்றோர் எண்ணிக்கை அனுதினமும் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. தமிழக அரசில் காலியாக உள்ள பல இலட்சம் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதன் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கிட இயலும். அது குறித்த அறிவிப்புகள் இல்லாததது இளைஞர்களை பற்றிய கவலை இந்த அரசுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக உள்ளது.
வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு மிகச் சொற்பமான நிவாரணத்தை வழங்கியதும், தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் இறந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க மறுத்துள்ளது. அனைத்திற்கும் மேலாக விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்காதது, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை வழங்குவது பற்றி அறிவிப்பு ஏதும் இல்லாதது விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
ஊழல் முறைகேடுகள் கொடி கட்டி பறக்கிறது. அரசுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சேகர்ரெட்டி கைதாகி இருப்பதும், தலைமைச் செயலாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டுள்ளது ஆட்சியாளர்களின் ஊழல் அவலட்சணத்தின் பகுதியே.
ஊழல் முறைகேடுகளை தடுத்திட அரசின் உயர்மட்டத்தில் உள்ள முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீதான ஊழல் புகார் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பான “லோக் ஆயுக்தா” அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை ஆளுநர் உரையில் இடம் பெறாதது இயற்கையானதல்ல.
கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பது, சாதிய ஆணவக் கொலைகள் தொடர் கதையாக வருவது, ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரூ. 500 கோடி கொள்ளை விபரம் கண்டறியப்படாதது போன்றவை சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை படம்பிடித்துக் காட்டுகிறது. இவ்வளவுக்கும் மத்தியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக ஆளுநர் குறிப்பிடுவது முழுப் பூசணிக்காயை பிடிச்சோற்றில் மறைப்பதாகும்.
2016ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முழுமையான முதல் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் உரையில் அஇஅதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
ஓய்வுப்பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பண பயன்கள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனை வழங்க வேண்டும் என போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி ஏதுமில்லை.
மொத்தத்தில் தமிழக ஆளுநர் உரை விவசாயிகளுக்கோ, இளைஞர்களுக்கோ, தமிழக பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வையும் அளிப்பதாக அமையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
0 Komentar