ஆந்திர சந்திரபாபு நாயடுவின் அரசு பயங்கரவாத காட்டாட்சி தர்பார்!: தமிழக வாழ்வுரிமை கட்சி அறிக்கை



ஆந்திர சந்திரபாபு நாயடுவின் அரசு பயங்கரவாத காட்டாட்சி தர்பார்!
மீண்டும் தமிழர்கள் மீது காவல் வெறிநாய்களை                          கட்டவிழ்த்து விட்டார்!

செம்மரம் கடத்தியதாக 216 தமிழர்ளை சிறை பிடித்து ஒரே கூண்டுக்குள் அடைத்துச் சித்திரவதை!
மனிதத் தன்மையற்ற இந்த மிருகவெறியாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பான இந்த மனித உரிமை மீறல் குற்றத்தைப் புரிந்த சந்திரபாபு நாயடு அரசின் மீது கிரிமினல் நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
குறிப்பாக தமிழர்கள் மீதே இரத்தவெறித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் சந்திரபாபு நாயடு அரசின் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்று தமிழக அரசையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
செம்மரக் கடத்தலைத் தடுக்க சிறப்பு காவல்படை என்ற பெயரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு ஒரு காவல்படையை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் முழுக்க முழுக்க தனது விருப்பத்திற்கும் விரல் அசைவிற்கும் ஏற்ப செயல்படுபவர்களாகப் பார்த்து, சரியாகச் சொல்வதென்றால் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகப் பார்த்து, காவலர்களாக தேர்வு செய்திருக்கிறார்.
இவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியும் உண்மையிலேயே செம்மரக் கடத்தலைத் தடுப்பதன்று. மாறாக செம்மரம் கடத்தும் பழைய மாஃபியாக்களை ஒழித்துவிட்டு அவர்களுக்குப் பதிலாக சந்திரபாபு நாயடுவின் ஆட்களை செம்மரக் கடத்தலில் இறக்கிவிடுவதுதான் திட்டம்.
ஆனால் பாரம்பரிய செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைத் தொடக்கூட துப்பில்லாத பட்சத்தில் அவர்களால் ஏமாற்றி, ஆசைவார்த்தைகளைக் கூறி அழைத்து வரப்படும் அப்பாவித் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது சந்திரபாபு நாயடுவின் சிறப்புக் காவல் படை.
கடந்த மூன்று நாட்களாக இந்தக் காவல் வெறிநாய்கள் கோம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் ஆந்திர சேஷாசலம் வனப் பகுதியில் மனித வேட்டையில் ஈடுபட்டது.
அங்கு மனிதர்கள் யாரும் சிக்காத நிலையில் அவர்களின் பார்வை ஊர்ப்பகுதிகளை நோக்கித் திரும்பியது.
கடப்பா மாவட்டத்தின் குக்கல்தொட்டி, ரயில்வே கோடூர், காஜுவ்பேட்டை, பொதட்டூர், லங்கமல்லா ஊர்களை ஒட்டிய பகுதிகளில் வலைபோட்டுத் தேடி மொத்தம் 216 தமிழர்களை வலுக்கட்டாயமாக சிறைபிடித்தது அந்தக் காவல்படை.
பிடித்த அத்தனை பேரையும் ஒரே லாரிக்குள் ஆடு, மாடுகளைப் போல் அடைத்து தார்ப்பாய் கொண்டு மூடி காவல் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
அந்த லாரிக்குள் மூச்சுவிடக்கூட முடியாதபடி கடுமையான சித்திரவதையை அனுபவித்த தமிழர்களை காவலர்களும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். முகாமுக்குள் வந்ததும் ஒவ்வொருவராக அடித்துத் துவைத்து கீழிறக்கப்பட்டனர்.
அனைவரின் ஆடைகளையும் களைந்து வெறும் ஜட்டியுடன் கும்பலாக குந்தவைத்தனர்.
அவர்களின் அங்க அடையாளங்களை குறித்துக் கொண்டு எளிதில் வெளிவர முடியாத கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் தள்ள இருக்கின்றனர்.
ஈவிரக்கமற்ற, மனிதாபிமானத்திற்கு இடமேயில்லாத இந்த ஈனச் செயலைச் செய்தவர்களைத்தான் சிறப்பு காவலர்கள் என்கிறார் சந்திரபாபு நாயடு.
கடத்தல்பேர்வழிகளை விட்டுவிட்டு தமிழர்களாகப் பார்த்தே வேட்டையாடும் இந்தக் கயவர்களைப் பாதுகாக்கும் சந்திரபாபு நாயடு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரம் ஆந்திர அரசின் மீது இந்திய, தமிழக அரசுகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதைவிடவும் கொடூரமான படுகொலையையே நிகழ்த்தியது இதே சந்திரபாபு நாயடுவின் ஆந்திர அரசு.
அப்போது சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே 20 அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்றனர். சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத, ஓரே இடத்தில் 20 பேரை போலி என்கவுன்டரில் ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம் அது.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 20 தமிழர்களின் உடல்கள் கிடந்த இடத்தில் அவர்கள் வெட்டியதாக கூறப்படும் செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்தபோது, அவை சுமார் 1 மாதத்திற்கு முன்பே வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் என்று தெரியவந்தது.
அந்த செம்மரக் கட்டைகளில் போலீசார் வழக்கு எண் பதிவு செய்து எழுதி இருந்ததும் அந்த எழுத்துகளை அழித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் திட்டமிட்டு 20 தமிழர்களையும் பிடித்துவைத்து செம்மர கட்டைகளை கடத்தியதாக போலியாக போலீசார் நாடகம் ஆடி சுட்டுக் கொன்றது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த சம்பவத்திற்கெதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி ஆந்திர அரசுக்கும் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்தது.
அந்த 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தொடர்ந்து கள்ள மவுனம் சாதித்து வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அந்த வழக்கு இன்னும் முடியவில்லை.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் தமிழர்கள் மீது இரத்தவெறித் தாக்குதலைத் தொடுத்தவண்ணம் உள்ளது சந்திரபாபு நாயடு அரசு.
சந்திரபாபு நாயடு அரசின் இந்த தகாத போக்கிற்கு முடிவு கட்டியாக வேண்டும். அதற்கு தமிழக அரசு முழுமூச்சுடன் இறங்கியாக வேண்டும். ஆந்திர அரசு மீது மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது.
இதில் தமிழர் விரோத ஆந்திர சந்திரபாபு நாயடு அரசின் மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழகத்தின் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்ப வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

Previous
Next Post »
0 Komentar