போராட்டக்களத்தில் பின்லேடன் படம்! - முதல்வரின் பதில் காவல்துறை வன்முறையை நியாயப்படுத்தும் தந்திர நடவடிக்கை! - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு!


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  நடைபெற்ற காவல்துறையின் வன்முறை வெறியாட்டம் தொடர்பாக, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,   சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள், அமைதியான முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை சமூக விரோதிகள் சிலர் திசை திருப்ப முயற்சித்தாகவும், ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே காவல்துறை தடியடி நடத்தியதாகவும்  கூறியுள்ளார்.

முதல்வர் குறிப்பிட்ட  ஒசாமா பின்லேடன் படமுள்ள இரு சக்கர வாகனம், வன்முறை நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வெளியானது. அப்போது உடனடியாக காவல்துறை அது குறித்து விசாரிக்காமல், கடைசி நாளில் ஏற்பட்ட வன்முறைக்கு அது தான் காரணம் எனக் கூறுவது போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்த மேற்கொள்ளப்படும் தந்திர நடவடிக்கையாகவே தெரிகிறது. இந்த விசயத்தில் உளவுத்துறையை தன்வசம் வைத்துள்ள மாநில முதல்வர் தவறான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.  அதாவது பின்லேடன் படம் இருந்த அந்த வாகனம் தங்களுடைய வேறு ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவருடையது. அது ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வில் நடந்தது அல்ல. இதற்காக அந்த நபர் தங்களால் கண்டிக்கப்பட்டார் எனவும் ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக, சமூக வலைதளத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதல்வர்  சட்டப்பேரவையில் பதில் அளிப்பது  கண்டனத்திற்குரியது. முதல்வரின் இந்த பதில் பாஜகவினரின் குற்றச்சாட்டுகளை அப்படியே வழிமொழிவது போல் உள்ளது.

சமூக விரோதிகள் சிலர் போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்ததாக கூறும் முதல்வர், தனக்கு கீழ் இருக்கும் காவல்துறையின் உளவுத்துறை முன்னரே அத்தகைய சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களை முடக்காமல்  கோட்டை விட்டது ஏன்?

சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய காவல்துறை, ஒட்டுமொத்த போராட்டக்காரர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும் சமூக விரோதிகளைப் போன்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஏன்? பொதுச் சொத்துக்களை, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது ஏன்? சமூக விரோதிகள் எனக்கூறி பெண்களை, கர்ப்பிணிகளை, சிறுவர்களைக் கூட விட்டுவைக்காமல் தாக்கியது ஏன்?

ஒரு வார காலமாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடைசி நாளில் போராட்டக்காரர்கள் கோரிய குறைந்த பட்ச அவகாசத்தை கூட அளிக்காமல் காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது ஏன்? இந்த விவகாரத்தில் திருச்சி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை ஆணையர்கள் மேற்கொண்ட சுமூகமான நடவடிக்கையை, சென்னை, கோவை ஆணையர்கள் மேற்கொள்ளாதது ஏன்?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற நிலையை விமர்சிக்கும் வகையில் முதல்வர் மற்றும் பிரதமரை விமர்சிப்பது சமூக விரோதமாகுமா? அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? லட்சக்கணக்கானோர் திரண்ட போராட்டத்தில் சிலர் வரம்பு மீறி வைத்திருந்த பதாகைகளால் ஒட்டுமொத்த போராட்டமும் சமூக விரோதிகளின் கையில் சிக்கிவிட்டது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமல்லாமல், காவிரி, முல்லை பெரியாறு போன்றவையும் பேசப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டதாக கூறும் முதல்வரின் பதில் அறிக்கையும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரின் குற்றச்சாட்டும் ஒன்றாகவே உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்த விவகாரம் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, காவிரி, முல்லை பெரியாறும் தமிழர் உரிமை சார்ந்த பிரச்சனை தான். இந்த விவகாரங்களை பேசுவதால், அது சமூக விரோதமாகிவிடும் என்பது ஏற்புடையதல்ல.

தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டக்களத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை விரும்பாத பாஜகவின் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் மதரீதியில் மக்களை பிளவுப்படுத்தும் வகையில், தொடர்ந்து இந்த போராட்டங்கள் குறித்து தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை முன்மொழியும் வகையில் தமிழக முதல்வரின்  பதில்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் நெருக்கடி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Previous
Next Post »
0 Komentar