பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை
அண்ணாமலைப் பல்கலை ஊழியர்களுக்கு
உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்!
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திசம்பர்
மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் புத்தாண்டை மகிழ்ச்சியாகவும்,
உற்சாகமாகவும் கொண்டாட வேண்டிய பணியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தமிழக அரசு
காட்டும் அலட்சியம் மிகவும் கண்டிக்கத்தக்கது.a
தமிழகத்தின்
இரண்டாவது மூத்த பல்கலைக்கழகமான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி
நெருக்கடியில் சிக்கித் தவித்ததால், அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகளை தடுக்கும் நோக்குடன் அதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என
முதன்முதலில் நான் யோசனை தெரிவித்தேன். அதன்படியே 2013ஆம் ஆண்டில்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியதுடன், அதை
நிர்வகிக்க இ.ஆ.ப அதிகாரி சிவதாஸ் மீனாவை தனி அதிகாரியாகவும் நியமித்தது.
ஆனால், இந்த நடவடிக்கையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரியதன் நோக்கம்,
அந்நிறுவனம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை அறிந்து, அதற்கான தீர்வுகளை
காண வேண்டும் என்பது தான். ஆனால், தமிழக அரசு அந்தக் கடமையை
நிறைவேற்றவில்லை. மாறாக, பல்கலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தனி
அதிகாரி மூலம் சில மாதங்கள் நிர்வாகத்தை கவனித்து, துணை வேந்தரிடம்
பொறுப்பை ஒப்படைத்ததுடன் தமிழக அரசு ஒதுங்கிவிட்டது. இது அண்ணாமலை
பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், அதன் பணியாளர் நலனுக்கும் எந்த வகையிலும்
பயனளிக்கவில்லை.
பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தொடருவதால்
கடந்த 4 ஆண்டுகளாக ஊதியத்தைத் தவிர வேறு பயன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதுவரை 9 தவணை அகவிலைப்படி உயர்வு, அதற்கான நிலுவைத் தொகை, ஈட்டிய
விடுப்புக்கான பணம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. ஊதியம் மட்டுமே
வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாத ஊதியமும் நவம்பர் மாதம்
முதல் வாரம் வரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம்
2&ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்
கடுமையான அறிக்கை வெளியிட்ட பிறகு தான் அவசர அவசரமாக ஊதியம் வழங்கப்பட்டது.
அப்போதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு நிரந்தரத்
தீர்வு காண வேண்டும் என்றும், அப்போது தான் ஆசிரியர்களும், ஊழியர்களும்
எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு தீர்வு காண முடியும் என்றும் மருத்துவர்
அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அதற்கான
நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாததன் விளைவு தான் அடுத்த இரண்டு
மாதங்களுக்குள் மீண்டும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க ஆண்டுக்கு ரூ.750 கோடி செலவாகும் நிலையில்,
அந்த அளவுக்கு வருவாய் இல்லாததால் ஆண்டுக்கு ரூ.400 கோடி பற்றாக்குறை
ஏற்படுகிறது. இதை சமாளிப்பதற்காக கடன் வாங்கியதால் பல்கலைக்கழகத்தின்
மொத்தக் கடன் ரூ.1026 கோடியாக அதிகரித்து விட்டது. மேலும் பல்கலைக்கழக
பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வீட்டுக்கடன், வங்கிக் கடன்,
ஆயுள்காப்பீட்டு பிரிமியம் ஆகியவை முறையாக செலுத்தப்படவில்லை. இவற்றின்
மதிப்பு மட்டும் பல கோடிகளாகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக
நிதிநிலைமை மிகவும் மோசமாகிவிட்ட நிலையில், அதை சரிசெய்ய வேண்டிய கடமை
அரசுக்கு உள்ளது. பல்கலைக்கழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களையும், அதற்கான
தீர்வுகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டிய
துணைவேந்தர் அதை செய்யாமல் சசிகலாவை சந்தித்து ஆட்சிப் பொறுப்பையும்,
கட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பது
கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தின் தனி அதிகாரியாக இருந்த சிவதாஸ் மீனா
தான் இப்போது முதலமைச்சரின் செயலராக இருப்பதால் இப்பிரச்சினையில் உடனடியாக
கவனம் செலுத்தி, பல்கலைக்கழக நிதிநெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
நிதி நெருக்கடியை சமாளிக்க
பல்கலைக்கழகத்தின் கடனை தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், 2018 மார்ச்
வரையிலான மானியமாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அத்துடன்,
பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையை 5456 ஆக
உயர்த்துதல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற
நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன், கடலூர்,
அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளை இணைப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரித்தல்
உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஓராண்டிற்குள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
நிதிநெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பல்கலைக்கழக
பணியாளர்ளுக்கு வழங்கப்பட வேண்டிய 9 தவணை அகவிலைப்படி உயர்வு, 6 ஆண்டு
பதவி உயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
From:
0 Komentar