உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும்,
வேதனையையும் கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில்
நிலுவையுள்ள வழக்கில் ஏதோ நேற்றுதான் இந்த வழக்கு தொடரப்பட்டதை போல தீர்ப்பு எழுதி
கொண்டிருக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் சொல்வது மிகப்பெரிய ஏமாற்றுவேலை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள்
பொருளாதார ரீதியிலான உள்நோக்கத்தோடும், வெளிநாடுகளின் தூண்டுதலாலும்
செயல்படுகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின்
கருத்து தமிழர்கள் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் விழுந்த பேரிடியாகும். தண்ணீர்
இல்லாமல் பயிர்களும், விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பால் இது கருப்பு பொங்கல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் இது
கசப்பு பொங்கலாய் மாறிவிட்டது.
தமிழகத்தின் பட்டிதொட்டிகளில்
எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வெடித்திருக்கிறது. இது இளைஞர்களும், மாணவர்களும்
சம்மந்தப்பட்டது. இளைஞர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் தெருவுக்கு
வந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் நடத்துகின்ற போராட்டமல்ல. 1960 -களில்
நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போல ஒரு வேகமும், எழுச்சியும் தமிழகம் பூராவும்
உருவாகியிருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற அரசு வருட கணக்கில் இதற்கான சட்டத்திருத்தத்தை
கொண்டு வராமல் ஏமாற்றுகிறார்கள். இதற்கான சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில்
கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டால் உச்சநீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். தமிழக
அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும்
உணர முடிகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடாத
கர்நாடக அரசை மத்திய அரசு என்ன செய்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும்
கர்நாடக முதலமைச்சர் காவிரியில் தண்ணீரை திறக்க முடியாதென்று உறுதிப்பட
பேசுகிறார். அந்த துணிச்சல் தமிழக அரசுக்கு வராதா, தமிழக முதலமைச்சருக்கு வராதா ?.
அந்த துணிச்சல் நமக்கு இருக்குமென்றால் தமிழக அரசு வாய் பேச்சு பேசாமல்
நடவடிக்கைகளில் இறங்கி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டும். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். தமிழக பூராவும் ஒரு இடம்
பாக்கி இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஊக்கத்தை இப்போது நடக்கின்ற
போராட்டங்கள் கொடுத்திருக்கின்றன. இதை தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்.
0 Komentar