புதுவை மாநில பருவதராஜகுல சங்கம்

(தேசிய மீனவர் பேரவையுடன் இணைந்தது)
புதுச்சேரி.
செய்தி குறிப்பு
     புதுவை  மாநில  பருவதராஜகுல  சங்கம்  பொதுக்குழு கூட்டம் இன்று 31-12-2016 சனிக்கிழமை, காலை 10 மணியளவில்,  புதுச்சேரி அரியாங்குப்பம், ராதாகிருஷ்ணா நகர், அண்ணாமலை – அன்னபூரணி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
   கூட்டத்துக்கு  புதுவை  மாநில பருவதராஜகுல சங்க தலைவர் திரு. த.தண்டபாணி (எ) பழனிவேல்  தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்கள்  திரு. அ. இராமலிங்கம், திரு.மு.இராஜேந்திரன், திரு. வா.முருகன், ஒருங்கிணைப்பாளர் திரு. ப. ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   மூத்த ஒருங்கிணைப்பாளர் திரு. பொன்.கோவிந்தசாமி நோக்க உரையாற்றினார்.
  தேசிய மீனவர் பேரவை தலைவர் திரு. மா. இளங்கோ சிறப்புரையாற்றினார்.
   ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி (எ) பாவாடைசாமி வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் திரு. அ.கருணாகரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன :

1.   மீனவ சமுதாயத்தின்மீது அக்கரை கொண்டு மீனவர்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றிய மறைந்த தமிழக மாண்புமிகு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

2.   புதுச்சேரி மாநில சட்டமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள மாண்புமிகு திரு. வி. நாராயணசாமி அவர்களின் தலைமையிலான அரசுக்கும், அமைச்சர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

3.   புதுச்சேரியில் அமைந்த புதிய அரசில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய “ ஒப்பற்ற தலைவர் ” திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நல அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்பு வழங்கிய, காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை மற்றும் மாண்புமிகு, முதலமைச்சர் திரு.வி.நாராயணசாமி அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

4.   கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பருவதராஜகுல மக்கள் ஆதரவோடு அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த ஆதரவு பெற்று அமோக வெற்றி பெற்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி அவர்களை இக்கூட்டம் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
                
5.   புதுச்சேரி மாநில உள்நாட்டு மீனவர்களுக்கு, புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தடைக்கால, சீற்றகால நிவாரண உதவி தொகைகள் மற்றும் வேட்டி – புடவை போன்ற உதவிகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறோம்.

6.   புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு மீனவர்கள் ஆற்றில் தொழில் செய்ய உரிய கட்டுமரம், வலை போன்ற உபகரணங்கள் அரசால் வழங்கப்படவில்லை இந்நிலையை போக்கிட ஆற்றில் மீன்பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களுக்கு கட்டுமரம், வலை போன்ற தொழில் கருவிகளை வழங்க புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

7.   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குளம், குட்டை, ஆறு, ஏரி, தடுப்பணை போன்ற அனைத்து நீர் நிலைகளிலும் மீன் வளர்க்கவும்,  மீன்களை குத்தகை எடுக்கவும், உரிய உரிமங்களை அந்தந்த கிராம கொம்யூன், நகராட்சி அளவிலான உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க உரிய அரசாணை பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.

8.   புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை கிராமங்களில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுவது போல், உள்நாட்டு மீனவர்களுக்கு அவர்கள் வாழும் கிராமங்களில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.

9.   ஆறுகளில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் கலப்பதால், வாழ்வாதாரத்துக்காக தங்கள் பாரம்பரிய வழக்கப்படி ஆற்றில் இறங்கியும், கட்டுமரங்களில் சென்றும் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் பலவகை தோல் நோய்கள் உள்ளிட்ட  தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே அனைத்து மீனவ கிராமங்களிலும், மருத்துவபரிசோதனை முகாம்களை மீன்வளத்துறை – சுகாதாரத்துறை இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

10.  பாரம்பரியமாக வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியினரான மீனவ மக்கள் பல தீராத நோய்களுக்கு ஆளாவதால் புதுச்சேரி அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கியுள்ள தீராத நோய்தாக்குதலுக்கு உள்ளவர்களுக்கான மாத நிதி உதவி திட்டத்தைப் போல் மீனவர்களுக்கும் மாதம் ரூ.3000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

11.  புதுச்சேரி மாநிலத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினர் அனைவரையும் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இக்கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு, மத்திய அரசை அணுகி மீனவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க உரிய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

12.  புதுவை மாநில பருவதராஜகுல சங்கம் தேசிய மீனவ பேரவையுடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
                        த. தண்டபாணி (எ) பழனிவேல்,
                                தலைவர்,
                      புதுவை மாநில பருவதராஜகுல சங்கம்.
Previous
Next Post »
0 Komentar