2016: தமிழ் அகதிகள் ஒரு பார்வை

இலங்கையில் உள்ள இனப்பிரச்னை காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரி செல்கின்ற போதும் தமிழகத்திலேயே பெருமளவிலான அகதிகள் வசிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் 60,000 த்திற்கும் அதிகமான தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த ஆண்டு முடிவடையும்  நிலையில், தமிழ் அகதிகள் தொடர்பான முக்கியமான நிகழ்வுகளை பற்றிய ஒரு பார்வை.

- கடந்த மார்ச் மாதம் ஈழத்தமிழ் அகதிகள் வசிக்கும் முகாம்களில் அவர்களின் நிலை தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது தொடர்பான விடயங்களே அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

- மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியை வருவாய்துறை அதிகாரி தகாத வார்த்தைகளில் திட்டியதால் அந்த அகதி மனமுடைந்து மின்கம்பத்தின் மீதேறி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த உண்மை கண்டறியும் குழு, தனது அறிக்கையில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்திருந்தது.

- அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

- பழவேற்காடு அருகே ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக 30க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- அடுத்த சில தினங்களில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து இந்தோனேசியா கடல் பகுதியில் 44 தமிழ் அகதிகள் தத்தளிக்கும் சம்பவம் நடந்தது. ‘எங்களை திருப்பி அனுப்புவது என்றால் இங்கேயே சுட்டுக்கொன்று விடுங்கள்’ என்ற அந்த அகதிகளின் கதறல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர்கள் பின்னர் இந்தோனேசிய முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்திருந்தனர்.

-  படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சிப்பவர்கள் ஒருபோதும் இந்நாட்டில் நுழையமுடியாது என்ற ஆஸ்திரேலிய அரசின் எச்சரிக்கை விளம்பரங்கள் தமிழக அகதி முகாம்களில் அதிகரித்திருந்தன.

- செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பொதுத்துறையின் விளக்கக் குறிப்பில், 2015-16 யில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் உதவியுடன்  452 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

- தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தும் வருகின்றது. அதே சமயம் இலங்கை இனப்பிரச்னை முடிந்துவிட்டது என்ற பிம்பத்தை உருவாக்க நடக்கும் முயற்சி இது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது.

- ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம் வர்தா புயலில் கடுமையான சேதமானது. 

Previous
Next Post »
0 Komentar