தமிழக முன்னாள் ஆளுனர் பர்னாலா
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுனரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுர்ஜித் சிங் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணா துயரமும் அடைந்தேன்.
சுர்ஜித் சிங்கின் அரசியல் வரலாறு மிக நீண்டது. இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இந்தியாவின் முதல் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அரசியலில் இருந்து பல ஆண்டுகள் ஒதுங்கியிருந்தார். பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபட்ட அவர் பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய வரலாற்றில் கித்வாய்க்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் ஆளுனராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. 1991&ஆம் ஆண்டு தமிழக ஆளுனராக இருந்தபோது, அப்போதைய திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு கட்டாயப்படுத்திய போது, அவ்வாறு செய்ய முடியாது என்று கூறி துணிச்சலாக மறுத்தவர். தமிழகத்தின் ஆளுனராக மூன்று முறை பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டும். அவருக்கு பிறகு அவரளவுக்கு நேர்மையானவர் தமிழகத்துக்கு ஆளுனராக கிடைக்கவில்லை.
1979 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிலிருந்து விலகிய போதும், 1996&ஆம் ஆண்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும் இந்தியப் பிரதமர் பதவி இருமுறை அவரை தேடி வந்தது. மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும், வாஜ்பாய் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக பணியாற்றி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியவர். 75 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாதவர் என்பது தான் சுர்ஜித்சிங் பர்னாலாவின் சிறப்புகளின் உச்சமாகும்.
பர்னாலா மறைவின் காரணமாக நேர்மையான, பொறுப்புள்ள அரசியல் தலைவர் ஒருவரை இந்தியா இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் ஆதரவாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Komentar