பா.ம.க. தலைமை நிலைய செய்தி அறிக்கை

பா.ம.க. தலைமை நிலைய செய்தி அறிக்கை
மருத்துவர் அய்யா அவர்களுடன் 
நாடார் சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்  பல்வேறு நாடார் சங்கத் தலைவர்கள் இன்று(31.12.2016) சனிக்கிழமை சந்தித்து பேசினார்கள். மருத்துவ அய்யா அவர்களை சந்தித்த குழுவில் நாடார் மக்கள் பேரவையின் மாநில அமைப்பாளர் ஏ.பி. ராஜா, துணைத் தலைவர் கே.சுந்தரேசன், பொருளாளர் ஏ. இசக்கி முத்து, திண்டிவனம் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் தலைவர் கே.பி.என். ரமேஷ், துணைத் தலைவர் தங்கபாண்டி, செயலாளர் பார்வதி முத்து பொருளாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தனர்.

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட  9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 168 ஆவது பக்கத்தில்  காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்தது. அதில் சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்தியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான்; நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும்,  நாடார்கள் சாணார் எனப்படும் கீழ்சாதியை சேர்ந்தவர்கள்; நாடார் சமுதாய பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது;  அவர்கள் மேலாடை அணிவதற்காக கிறித்தவ மதத்திற்கு மாறினர் என்று தவறாக திரித்து எழுதப்பட்டிருந்தது.
 நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இப்பாடம் அமைந்திருந்ததை முதன்முதலில் கண்டறிந்து, அப்பாடத்தை நீக்க வேண்டும் என்று 25.10.2012 அன்று குரல் கொடுத்ததுடன், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் அப்பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு நாடார் சமுதாய நிர்வாகிகள் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.


                                                      இப்படிக்கு
                                                  தலைமை நிலையம், 
                                                 பாட்டாளி மக்கள் கட்சி, 
                                               தேனாம்பேட்டை, சென்னை-18

குறிப்பு: சந்திப்புக்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியையும், புகைப்படங்களையும் வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Previous
Next Post »
0 Komentar